ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி


ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
x
தினத்தந்தி 6 Jan 2019 11:30 PM GMT (Updated: 6 Jan 2019 9:04 PM GMT)

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கும் விவகாரத்தில் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்து உள்ளார்.

புதுடெல்லி,

அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கி இருப்பதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இது பொய் எனக்கூறிய ராகுல் காந்தி, அப்படி கொடுத்ததற்கான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு வற்புறுத்தி இருந்தார்.

இதற்கு நிர்மலா சீதாராமன் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.26,570.80 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மேலும் ரூ.73 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பான ஆவணங்களையும் தனது பதிவில் இணைந்திருந்த நிர்மலா சீதாராமன், இதன் மூலம் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்பாரா? அல்லது பதவி விலகுவாரா? என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் பொய்களை பரப்பி வருவதாக குற்றம் சாட்டிய அவர், இது அவமானம் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல மற்றொரு மத்திய மந்திரியான ஸ்மிரிதி இரானியும் ராகுல் காந்தியை குறைகூறி உள்ளார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பான உண்மைகள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டதால் ராகுல் காந்தி மிகவும் குழப்பத்தில் இருப்பதாகவும், எனவே வேறு பொய்களை உருவாக்குவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

ராகுல்காந்தியின் பொய்கள் அனைத்தும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் வெளிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.


Next Story