அகிலேஷ் யாதவிற்கு எதிராக பா.ஜனதா சிபிஐயுடன் கூட்டணி - சமாஜ்வாடி குற்றச்சாட்டு


அகிலேஷ் யாதவிற்கு எதிராக பா.ஜனதா சிபிஐயுடன் கூட்டணி - சமாஜ்வாடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Jan 2019 9:33 AM GMT (Updated: 7 Jan 2019 10:12 AM GMT)

அகிலேஷ் யாதவிற்கு எதிராக பா.ஜனதா சிபிஐயுடன் கூட்டணி அமைத்துள்ளது என சமாஜ்வாடி குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் இந்த மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது.  அங்கு பா.ஜனதாவை எதிர்கொள்ள விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர முடிவு செய்துள்ளன.  அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் போட்டியிட விட்டுக்கொடுக்கப்படும் என தெரிகிறது.

சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அகிலேஷ் யாதவை கண்காணிப்பு வளையத்திற்குள் சிபிஐ கொண்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி உறுதியாகும் நிலையில் இந்நகர்வு ஏற்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் அகிலேஷ் யாதவிற்கு எதிராக பா.ஜனதா சிபிஐயுடன் கூட்டணி அமைத்துள்ளது என சமாஜ்வாடி குற்றம் சாட்டியுள்ளது. அகிலேஷ் யாதவிற்கு எதிரான சிபிஐ நகர்வுக்கு எதிராக சமாஜ்வாடி எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி  அமைப்பதால், பா.ஜனதா சிபிஐயுடன் கூட்டணி அமைக்கிறது என குற்றம் சாட்டியுள்ளனர். 

சமாஜ்வாடி எம்.பி. தர்மேந்திர யாதவ் பிரச்சனையை அவையில் எழுப்பினார். அதனை தொடர்ந்து பிற எம்.பி.க்களும் கடும் கோஷம் எழுப்பினர். பா.ஜனதா, சிபிஐ கூட்டணி அமைத்துள்ளது என கோஷம் எழுப்பினர். மாயாவதியும், அகிலேஷ் யாதவும் 4-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 5-ம் தேதி சிபிஐ ரெய்டு நடக்கிறது. உ.பி. மக்கள்தான் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர், சிபிஐ கிடையாது என்பதை பா.ஜனதா புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். 

Next Story