பீகார் அரசு காப்பக பயங்கரம்: சிறுமிகளை ஆபாச நடனம் ஆடவைத்து, பலாத்காரம் - சிபிஐ குற்றப்பத்திரிகை


பீகார் அரசு காப்பக பயங்கரம்: சிறுமிகளை ஆபாச நடனம் ஆடவைத்து, பலாத்காரம் - சிபிஐ குற்றப்பத்திரிகை
x
தினத்தந்தி 7 Jan 2019 12:41 PM GMT (Updated: 7 Jan 2019 12:41 PM GMT)

பீகார் அரசு காப்பகத்தில் சிறுமிகளுக்கு நடந்த பயங்கரமான சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.



பீகார் மாநிலம் முஷாபர்பூரில் அரசு உதவியுடன் நடத்தப்பட்ட காப்பகத்தில் மும்பையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஆய்வு செய்த போது அதிர்ச்சி தகவல் வெளியாகியது. காப்பகத்தில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஜூலையில் தெரியவந்தது.  காப்பகத்தில் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு பீகார் அரசை கடுமையாக கண்டித்தது. 

சிபிஐ விசாரணையை நடத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பிராஜேஷ் தாகூர், சிறுமிகளை சிறிய ஆடையுடன் ஆபாச நடனம் ஆடச் செய்துள்ளான், காப்பகத்திற்கு வந்தவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐயின் 73 பக்க குற்றப்பத்திரிக்கையில் இந்த பயங்கரம் தொடர்பாக விவரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஆபாச நடனம் ஆட மறுக்கும் சிறுமிகளுக்கு இரவு ஒரு ரொட்டியும், உப்பும் மட்டும் உணவாக கொடுக்கப்படும். சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு நல்ல உணவு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கொடுமைகள் அங்கு அரங்கேறியும் அதிகாரிகள் அனைத்தையும் தெரிந்து அமைதி காத்துள்ளனர். தாகூரை சந்திக்க விருந்தினராக வரும் நபர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தாகூர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என்றும் பாதிக்கப்பட்ட 33 சிறுமிகள் உள்பட 101 பேர் சாட்சிகள் எனவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story