குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரம்: பா.ஜனதா மற்றொரு கூட்டணியை இழந்தது


குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரம்: பா.ஜனதா மற்றொரு கூட்டணியை இழந்தது
x
தினத்தந்தி 7 Jan 2019 1:21 PM GMT (Updated: 7 Jan 2019 1:21 PM GMT)

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் பா.ஜனதாவுடன் நேரிட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாம் கனபரிசத் கூட்டணியை முறித்துக்கொண்டது.


மத்திய பாஜக அரசு கடந்த 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அசாமில் எதிர்ப்பு எழுந்தது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை பாராளுமன்றக் கூட்டுக்குழு அவையில் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் அசாமில் உள்ள அமைப்புகள் இதற்கு எதிர்ப்புக்களை பதிவு செய்துள்ளது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து அசாம் மாநில கட்சியான அசாம் கனபரிசத் கட்சி விலகியது. அசாமிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அனுமதிக்க மாட்டோம் என்பதில் அசாம் கனபரிசத் ஸ்திரமாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசிய பின்னர் கூட்டணி முறிவு தொடர்பான அறிவிப்பை அசாம் கனபரிசத் கட்சியின் தலைவர் அதுல் போரா அறிவித்துள்ளார். 

 “மசோதாவை சட்டமாக்க கூடாது என்பதில் எங்களுடைய கடைசி முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் மசோதா நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ராஜ்நாத் சிங் அறிவித்துவிட்டார். இதற்கு பின்னர் கூட்டணியில் இருப்பது என்ற கேள்விக்கே இடம் கிடையாது,” என கூறியுள்ளார் அதுல் போரார். அசாம் கனபரிசத் அறிவிப்புக்கு சிவசேனா வரவேற்பு தெரிவித்துள்ளது. 126 உறுப்பினர்களை கொண்ட அசாமில் பா.ஜனதாவிற்கு 61 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே ஆட்சிக்கு பிரச்சனை கிடையாது. பா.ஜனதா கூட்டணி கட்சிகளான போடோ மக்கள் முன்னணி மற்றும் அசாம் கனபரிசத் கட்சிக்கு தலா 14, 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 

Next Story