சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் செயல்பட சுப்ரீம் கோர்ட் உத்தரவு: காங்கிரஸ் வரவேற்பு


சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் செயல்பட சுப்ரீம் கோர்ட் உத்தரவு: காங்கிரஸ் வரவேற்பு
x
தினத்தந்தி 8 Jan 2019 8:31 AM GMT (Updated: 8 Jan 2019 8:31 AM GMT)

சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் செயல்படலாம் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

சிபிஐ இயக்குநருக்கான பணிகளில் இருந்து தன்னை விடுவித்தும், விடுப்பில் அனுப்பியும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையை கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி மேற்கொண்ட நீதிபதிகள் அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், அந்த மனு மீதான இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநராக பணியமர்த்தியது. இருப்பினும், அலோக்  வர்மா மீதான புகாரை மத்திய ஊழல் கண்காணிப்பகம் (சிவிசி) விசாரித்து முடிக்கும் வரை, அவர் பெரிய கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில்,  அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக பணியமர்த்திய சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சிவிசி பரிந்துரைப்படியே அலோக் வர்மா விடுப்பில் அனுப்பப்பட்டார் என்று தெரிவித்தார். பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அலோக் வர்மா கூறியதாவது:- “ சிபிஐ-யின் கண்ணியத்தை பேணும் வகையிலேயே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. சிவிசி பரிந்துரைப்படியே இரண்டு அதிகாரிகளையும் அரசு விடுப்பில் அனுப்பும் முடிவை எடுத்தது” என்றார். 

காங்கிரஸ் வரவேற்பு

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் வரவேற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- “ சிபிஐ இயக்குநரை நீக்கியதற்காக அரசை சாடிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ரபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்த அலோக் வர்மா திட்டமிட்டதாலேயே, மத்திய அரசு அவரை விடுப்பில் அனுப்பியது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story