10% இட ஒதுக்கீடு அரசியல் ஆதாயத்திற்கான அறிவிப்பு - மாயாவதி விமர்சனம்


10% இட ஒதுக்கீடு அரசியல் ஆதாயத்திற்கான அறிவிப்பு - மாயாவதி விமர்சனம்
x
தினத்தந்தி 8 Jan 2019 9:42 AM GMT (Updated: 8 Jan 2019 9:42 AM GMT)

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பு அரசியல் ஆதாயத்திற்கானது என மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும். அதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக அரசியல் சாசனத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளதை எதிர் கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பேசுகையில், இட ஒதுக்கீடு அறிவிப்பு அரசியல் ஆதாயத்திற்கானது என விமர்சனம் செய்துள்ளார். 

மத்திய அரசின் முடிவை வரவேற்கிறேன். ஆனால் அறிவிப்பிற்கு பின்னணியில் இருக்கும் நோக்கம் தவறானது. இட ஒதுக்கீடு  முடிவை அரசு முன்னரே அறிவித்திருக்கலாம். பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அறிவித்திருப்பதில் அரசியல் ஆதாயத்துக்கான உள்நோக்கம் இருக்கிறது என்று கூறினார் மாயாவதி.

இதேபோன்று பல்வேறு சிறுபான்மையினர் சமூகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகையை வழங்க வேண்டும் என்று கூறியுள்ள மாயாவதி, "பிற்படுத்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருவதால் அவர்களுக்காக புதிய இட ஒதுக்கீடு கொள்கையை வரையறுக்க வேண்டும் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவிகிதம் வரை அதிகரிப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

Next Story