மீண்டும் பணியை தொடர அனுமதி: சி.பி.ஐ. இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது - மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


மீண்டும் பணியை தொடர அனுமதி: சி.பி.ஐ. இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது - மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Jan 2019 10:45 PM GMT (Updated: 8 Jan 2019 8:41 PM GMT)

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டனர்.

இந்த நிலையில் அலோக் வர்மாவை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பியதுடன் அவருடைய அதிகாரங்களையும் பறித்தது. இதேபோல் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அலோக் வர்மா சார்பில் மூத்த வக்கீல் பாலி எஸ்.நாரிமன் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று அதில் அவர் கூறி இருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை எழுதிய தலைமை நீதிபதி நேற்று விடுப்பில் இருந்ததால் தீர்ப்பை மற்ற 2 நீதிபதிகளும் வாசித்தனர்.

நீதிபதிகள் அமர்வு கூறியதாவது:-

சி.பி.ஐ. இயக்குனரின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது. அவர் தொடர்ந்து பணியாற்றலாம். அவரிடம் அனைத்து பொறுப்புகளையும் உடனே ஒப்படைக்கவேண்டும். அதேநேரம் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை அலோக் வர்மா கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது.

இனி, அலோக் வர்மாவுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்து நியமிக்கும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுதான் எடுக்கவேண்டும். மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் நடத்தும் விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படவேண்டும். தேர்வுக் குழுவின் கூட்டத்தை ஒரு வாரத்துக்குள் கூட்டவேண்டும்.

சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவின் நியமனமும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவின் பதவி காலம் வருகிற 31-ந்தேதி முடிவடையும் நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது, குறிப்பிடத்தக்கது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் பரிந்துரையின் பேரில்தான் சி.பி.ஐ.யின் மூத்த அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்’ என்றார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில், “பிரதமர் பிறப்பித்த சட்டவிரோத உத்தரவு சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பில் இருந்து நீங்கள்(மோடி) பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். இது உங்களுக்கு கிடைத்த பலத்த அடி” என்று குறிப்பிட்டு உள்ளார்.


Next Story