பசுமை தீர்ப்பாயம் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு வழக்கு: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பரபரப்பு


பசுமை தீர்ப்பாயம் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு வழக்கு: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 12:00 AM GMT (Updated: 8 Jan 2019 9:25 PM GMT)

தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு தடை இல்லை என்று உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஆலை நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து டிசம்பர் 15-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இதற்கிடையே ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரு மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடுகையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசுபட்டு இருக்கிறது. எனவே இந்த பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, ஆலையை மீண்டும் திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக ரத்து செய்து அந்த பகுதி மக்களை சுற்றுச்சூழல் கேட்டில் இருந்து பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் கே.வி.விசுவநாதன் வாதாடுகையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த தருண் அகர்வால் குழுவின் அறிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றும், ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் கிடையாது என்றும் கூறினார்.

உடனே நீதிபதிகள், தமிழக அரசின் ஆணையை தேசிய பசுமை தீர்ப்பாயம் எப்படி ரத்து செய்ய முடியும்? அவர்களுக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் பதில் அளிக்கையில், “தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் அந்த ஆணையை நடைமுறைப்படுத்தும் வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து ஆலையை மூடியது. அதனை எதிர்த்து தான் நாங்கள் மேல்முறையீடு செய்தோம்” என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது வாதத்தை தொடங்கினார்.

உடனே நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன், “நீங்கள் யார்? யாருக்காக ஆஜராகி இருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வைகோ தானும் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதாகவும். அந்த மனுவையும் சேர்த்து இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதிகள், முதன்மை வழக்கோடு உங்கள் மேல்முறையீட்டு மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று கூறினார்கள்.

தொடர்ந்து அரிமா சுந்தரம் வாதாடுகையில் கூறியதாவது:-

தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் நடைமுறைப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவு இணையதளத்தில்தான் வெளியிடப்படும் என்றும், திறந்த அமர்வில் வழங்கப்படாது என்றும் அறிவித்த போது எதிர்மனுதாரர்கள் அல்லது இடையீட்டு மனுதாரர்கள் யாரும் அப்போது அதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. ஆனால் ஐகோர்ட்டில் அந்த ஆட்சேபணை ஏற்கப்பட்டு உள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் தீர்ப்பாயம் நியமித்த நிபுணர் குழு முன்பும் இடையீட்டு மனுதாராக ஆஜரான பாத்திமா பாபு தரப்புக்கு ஸ்டெர்லைட் தரப்பு ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு உள்ளன. நிபுணர் குழு முன்பு இடையீட்டு மனுதாரராக பாத்திமா பாபுவின் தரப்பு விசாரிக்கப்பட்டது. எனவே தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிரான அவருடைய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்தான் தாக்கல் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதை மதுரை ஐகோர்ட்டு விசாரித்து பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். மேலும் ஆலையின் நிர்வாக பணிகளை மேற்கொள்ள எங்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதற்கு நீதிபதிகள், இது தொடர்பாக தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.

உடனே மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்த பாத்திமா பாபு தரப்பில் ஆஜரான வக்கீல் நிகில் நய்யார் வாதாடுகையில், “எங்கள் தரப்பு வாதங்களை முன்னெடுத்து வைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதிக்கவில்லை. எனவே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நாங்கள் ஐகோர்ட்டை அணுகினோம்” என்று கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்குமாறு பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை இல்லை என்று அறிவித்தனர்.

இதுதொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக பதில் அளிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

இதேபோல் ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

கடந்த மாதம் 21-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் உள்ள இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை 15.12.2018 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு நடைமுறையில் இருக்கும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

நீதிபதிகளின் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றைய விசாரணை குறித்து தமிழக அரசு வக்கீல் ராகேஷ் சர்மா கூறியதாவது:-

இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு நீதிபதி தருண் அகர்வால் குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உள்ளது. அந்த அறிக்கை பல இடங்களில் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் விதிமீறல்கள் மற்றும் மாசு கேடுகளை சரி செய்ய வழிமுறைகளை சுட்டிக் காட்டி உள்ளது அந்த குழுவின் அறிக்கை. தருண் அகர்வால் குழுவினர் அளித்துள்ளது பரிந்துரைகள் அல்ல, நிபந்தனைகள்தான்.

தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் அடிப்படையில் மாசு கேடு, விதிமீறல்கள் ஆகியவை பற்றித்தான் அத்தீர்ப்பாயம் விசாரிக்க வேண்டும். அந்த தீர்ப்பாயத்துக்கு தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தற்போதைய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கும் இறுதி தீர்ப்பின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. ஆலை நிர்வாகம் தங்களின் நிர்வாக பணிகளுக்கு அனுமதி வழங்குமாறு முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. அது குறித்து தனியாக மனு தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. தற்போது ஆலை மீண்டும் இயங்க அனுமதி என்று உத்தரவில் எங்கும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அரசு வக்கீல் ராகேஷ் சர்மா கூறினார்.


Next Story