சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக மீண்டும் பொறுப்பேற்பு


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக மீண்டும் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 6:12 AM GMT (Updated: 9 Jan 2019 6:12 AM GMT)

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக இன்று மீண்டும் பொறுப்பேற்று கொண்டார்.

புதுடெல்லி, 

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டனர்.

இந்த நிலையில் அலோக் வர்மாவை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பியதுடன் அவருடைய அதிகாரங்களையும் பறித்தது. இதேபோல் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அலோக் வர்மா சார்பில் மூத்த வக்கீல் பாலி எஸ்.நாரிமன் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று அதில் அவர் கூறி இருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

சி.பி.ஐ. இயக்குனரின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது. அவர் தொடர்ந்து பணியாற்றலாம். அவரிடம் அனைத்து பொறுப்புகளையும் உடனே ஒப்படைக்கவேண்டும். அதேநேரம் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை அலோக் வர்மா கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டது

சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பை தொடர்ந்து அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக இன்று மீண்டும் பொறுப்பேற்று கொண்டார்.

Next Story