ஈரான் வெளியுறவு துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு


ஈரான் வெளியுறவு துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 10:35 AM GMT (Updated: 9 Jan 2019 10:35 AM GMT)

ஈரான் வெளியுறவு துறை மந்திரியுடன் மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரு தரப்பு மற்றும் மண்டல விவகாரங்கள் பற்றி இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

புதுடெல்லி,

ஈரான் நாட்டின் வெளியுறவு துறை மந்திரி ஜாவத் ஜரீப் இந்தியாவில் 3 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜை அவர் இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு பற்றி வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி ரவீஷ் குமார் கூறும்பொழுது, இரு நாட்டு மந்திரிகளும் இருதரப்பு விவகாரங்கள் பற்றி முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.  அதனுடன் ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்துவது உள்ளிட்ட மண்டல சூழ்நிலை பற்றிய கருத்துகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது, சப்பார் துறைமுக திட்டத்தினை அமல்படுத்துவது மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு சூழ்நிலை ஆகியவை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன என தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பரில், ஈரான் நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது.  இதில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

வளைகுடா நாடுகளில் ஈரான் முக்கிய நட்பு நாடாக இந்தியாவுக்கு இருந்து வருகிறது.  கடந்த 2 வருடங்களில் இரு நாடுகள் இடையேயான நட்புறவு மேம்பட்டு உள்ளது.

ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3வது மிக பெரிய எண்ணெய் விநியோகிக்கும் நாடாக ஈரான் இருந்து வருகிறது.  கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் 2018ம் ஆண்டு ஜனவரி (நிதியாண்டின் முதல் 10 மாதங்கள்) இடையே 18.4 மில்லியன் டன்கள் கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

ஈரானில் சப்பார் துறைமுகம் கட்டுவதற்கு இந்தியாவும் பங்கு வகித்து வருகின்றது.  இந்த துறைமுகம் ஆனது, இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளுக்கு இடையே போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து வழிக்கான மண்டல மையம் ஆக திகழும்.

Next Story