10 சதவீத இடஒதுக்கீடு மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்


10 சதவீத இடஒதுக்கீடு மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 9 Jan 2019 4:54 PM GMT (Updated: 9 Jan 2019 5:02 PM GMT)

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறியது.

புதுடெல்லி,

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும். அதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசியல் சாசனத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி நேற்று மக்களவையில் 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவின் மீது 4 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. பின்னர்
323 உறுப்பினர்களின் ஆதரவுடன் மக்களவையில் 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு 3 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில், சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தாக்கல் செய்தார். இதற்கிடையே, மாநிலங்களவை அமர்வு முன் அறிவிப்பு இன்றி நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  

இந்நிலையில்10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக, திமுக, ராஷ்டிரிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.

பின்னர் விவாதம் முடிவடைந்தநிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 10 சதவீத இடஒதுக்கீடு  மசோதா 165 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு 7 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



Next Story