சபரிமலையில் பரிதாபம்: தமிழக அய்யப்ப பக்தர் யானை மிதித்து சாவு


சபரிமலையில் பரிதாபம்: தமிழக அய்யப்ப பக்தர் யானை மிதித்து சாவு
x
தினத்தந்தி 9 Jan 2019 9:30 PM GMT (Updated: 9 Jan 2019 7:17 PM GMT)

சபரிமலையில், தமிழக அய்யப்ப பக்தர் ஒருவர் யானை மிதித்து பரிதாபமாக பலியானார்.

கோட்டயம்,

சேலத்தை சேர்ந்த பரமசிவம் (வயது 35) என்பவர் தனது மகன் கோகுலகிருஷ்ணன் (11) உள்பட 14 பேருடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றார். இவர்கள் நேற்று அதிகாலை எருமேலியில் இருந்து பம்பைக்கு வனப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். பரமசிவம் தனது மகனை தோளில் சுமந்து கொண்டு நடந்தார்.

அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று இவர்களை தாக்க ஆவேசமாக ஓடி வந்தது. இதனால் பதறிப்போன அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.

பரமசிவம் தோளில் மகனை சுமந்து கொண்டு இருந்ததால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை. இதனால் யானை அவரை விரட்டி சென்று தாக்கியது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

பின்னர் அந்த யானை பரமசிவத்தை மிதித்துக்கொன்றது. அதே சமயம் பரமசிவத்தின் மகன் அதிர்ஷ்டவசமாக யானையிடம் இருந்து தப்பினான்.

மகன் கண்முன்னே தந்தை யானை மிதித்து உயிர் இழந்த சம்பவம் அய்யப்ப பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story