நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந் தேதி தொடங்குகிறது: இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் ஆகும்


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந் தேதி தொடங்குகிறது: இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் ஆகும்
x
தினத்தந்தி 9 Jan 2019 10:15 PM GMT (Updated: 9 Jan 2019 7:50 PM GMT)

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந் தேதி தொடங்கும் என்றும், பிப்ரவரி 1-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால மக்களவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்தது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக மாநிலங்களவை கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, குடியுரிமை திருத்த மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையான மத்திய அரசின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு வரும் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இதனிடையே தற்போதைய அரசின் பதவிக்காலம் குறுகிய காலமே இருப்பதால் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்வார் என தெரிகிறது. இது இந்த அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். இதற்காக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கி பிப்ரவரி 13-ந் தேதி வரை நடைபெற வாய்ப்பு உள்ளது. எனினும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.


Next Story