11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ‘தகுதி நீக்க வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது’ - ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வாதம்


11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ‘தகுதி நீக்க வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது’ - ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வாதம்
x
தினத்தந்தி 9 Jan 2019 10:45 PM GMT (Updated: 9 Jan 2019 8:14 PM GMT)

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வாதிட்டனர்.

புதுடெல்லி,

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதைப்போல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகளில் சக்கரபாணி தரப்பில் மூத்த வக்கீல் கபில்சிபல், தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, வக்கீல்கள் கவுதம் குமார், பாலாஜி சீனிவாசன் ஆகியோர் தங்கள் வாதங்களை முடித்துள்ளனர்.

நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மணிந்தர் சிங் ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் கூறியதாவது:-

இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரிக்கை எதுவும் சரியாக வைக்கப்படவில்லை. எனவே இது சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல.

இந்த விவகாரம் நடைபெற்ற நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய அணியை உண்மையான கட்சி என்று அறிவித்து அது தொடர்பாக தேர்தல் கமிஷனிலும் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் அக்கட்சி சார்பில் அப்போது கொறடாவும் தேவையான உத்தரவை பிறப்பித்து இருந்தார். எனவே, மனுதாரர்களின் வாதங்கள் எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் மனுதாரர்கள் தரப்பு வாதங்கள் தொடரும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.


Next Story