‘நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம்’ - ராகுல்காந்தி உறுதி


‘நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம்’ - ராகுல்காந்தி உறுதி
x
தினத்தந்தி 9 Jan 2019 11:15 PM GMT (Updated: 9 Jan 2019 8:30 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று ராகுல்காந்தி கூறினார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்னர், முதல் முறையாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஜெய்ப்பூரில் நடந்த விவசாயிகள் சங்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதில் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ராகுல்காந்தி பேசும்போது, “வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம். விவசாய கடன் தள்ளுபடி என்பது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுக்கப்படும் சிறிய நடவடிக்கைதான். என்றபோதிலும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய பசுமை புரட்சி திட்டம் தேவை” என்றார்.

நாடாளுமன்றத்தில் நடந்த ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்காததை கண்டித்த ராகுல்காந்தி, “ஊழலை அடியோடு ஒழிப்பேன் என்று கூறும் நாட்டின் பாதுகாவலர்(மோடி) ரபேல் விவாதத்தின்போது ஒரு நிமிடம் கூட மக்களவையில் இல்லை. ரபேல் விமான ஊழல் பற்றி நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதற்கும் பதில் இல்லை. ரபேல் விவாதத்தில் நான் எழுப்பிய எந்த கேள்விக்கும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனால் பதில் கூற முடியவில்லை” என்று குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியதும், இந்த மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்ததும் நினைவு கூரத்தக்கது.


Next Story