தேசிய செய்திகள்

இந்தி தெரியாத காரணத்திற்காக மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டேன் - தமிழக மாணவர் குற்றச்சாட்டு + "||" + Denied immigration at Mumbai airport because I dont speak Hindi alleges Tamil Nadu man

இந்தி தெரியாத காரணத்திற்காக மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டேன் - தமிழக மாணவர் குற்றச்சாட்டு

இந்தி தெரியாத காரணத்திற்காக மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டேன் - தமிழக மாணவர் குற்றச்சாட்டு
இந்தி தெரியாதா? தமிழகத்திற்கு போ? என தமிழக மாணவரிடம் மும்பை விமான நிலைய குடியேற்ற அதிகாரி அடாவடியாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மும்பை,

 “தமிழ், ஆங்கிலம் மட்டும் தெரியும் இந்தி தெரியாது” என்ற காரணத்திற்காக மும்பை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரியால் அவமானப்படுத்தப்பட்டதாக தமிழகத்தை சேர்ந்த மாணவர் தன்னுடைய டுவிட்டரில் வரிசையான பதிவுகள் மூலம் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின்  கிளார்க்சன் பல்கலைக்கழகத்தில் வேதியல் பிரிவில் பிஎச்டி படித்து வரும் மாணவர் ஆபிரகாம் சாமுவேல் கடந்த செவ்வாய் கிழமையன்று சென்னையிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.  இரவு 12:30 மணியளவில் குடியேற்ற அதிகாரியின் கவுண்டரில் அவமதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். 

 “தமிழ், ஆங்கிலம் மட்டும் தெரியும், இந்தி தெரியாது” என்ற காரணத்திற்காக மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் 33-வது கவுண்டரில் குடியுரிமை அதிகாரியால் பரிசீலனை நிராகரிக்கப்பட்டது. என்ன ஒரு பேரழிவு! இச்சம்பவம் தொடர்பாக அதிகாரியிடம் புகார்  கொடுத்துள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்” என டுவிட்டரில் பின் செய்த டுவிட்டில் ஆபிரகாம் சாமுவேல் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டில் சுஷ்மா சுவராஜ், மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியை இணைத்துள்ளார்.  
 
இச்சம்பவம் தொடர்பாக மும்பை சிறப்பு பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே ஆப்ரகாம் சாமுவேல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது, சம்பந்தப்பட்ட அதிகாரி தற்காலிகமாக பணியிலிருந்து அனுப்பப்பட்டார் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.  

“குடியேற்ற அதிகாரி எனக்கு முன்னதாக பெண் ஒருவரிடம் பேசுகையில் ஆங்கில மொழியில் பேசினார்.  என்னை பார்த்ததும், என்னால் இந்தியை புரிந்து கொள்ள முடியும் என்று நினைத்து பேசினார். அப்போது, மன்னிக்கவும் என்னால் இந்தி மொழியை புரிந்து கொள்ள முடியாது. அப்போது அவர் கோபம் அடைந்து மற்றொரு கவுண்டருக்கு செல்லும்படி கூறினார். என்னை தொடர்ச்சியாக தமிழகத்திற்கு செல்லுமாறு பேசினார். 

விமான நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவித்த போதும் அவருடைய பேசும் தொனியில் மாற்றம் ஏற்படவில்லை. இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி தெரியவில்லை என்றால், தமிழகத்திற்கு செல்லுங்கள் என்றுதான் பேசினார். இதுதொடர்பாக முறையான புகாரை தெரிவித்துள்ளேன். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் மொத்த சம்பவமும் தெரியவரும்” என ஆப்ரகாம் சாமுவேல் கூறியுள்ளார். இச்சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.