ஜிஎஸ்டி செலுத்துவதற்கான வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிப்பு- அருண் ஜெட்லி


ஜிஎஸ்டி செலுத்துவதற்கான வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிப்பு- அருண் ஜெட்லி
x
தினத்தந்தி 10 Jan 2019 11:07 AM GMT (Updated: 10 Jan 2019 11:07 AM GMT)

ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அருண் ஜெட்லி கூறி உள்ளார்.

புதுடெல்லி

டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் குழுவில் இடம்பெற்றுள்ள மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்..

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கைத்தறி பொருட்கள், ஜவ்வரிசி, தீப்பெட்டி, வெட் கிரைண்டர் உள்ளிட்டவற்றின் மீதான வரி விகிதத்தை குறைக்க வலியுறுத்தினார்.

மேலும், பம்பு செட்டுகள், வணிக சின்னமிடப்படாத நொறுக்கு தீனிகள், குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள், இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், கற்பூரம், காகிதப் பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றிற்கு வரி விலக்கு அளிக்குமாறு ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்திற்கு பின் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது: -

ஜிஎஸ்டி தொகுப்பு சலுகைக்கான  வரம்பு ரூ.1.5 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. இது வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த சலுகை திட்டத்தின் கீழ் வருபவர்கள், வரியை, காலாண்டிற்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும். ஆனால், ஆண்டிற்கு ஒரு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். சேவை துறையினருக்கும் இந்த திட்டத்தை அமல்படுத்த கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. தொகுப்பு சலுகைக்கான பலன்கள், சேவை துறையினருக்கும் கிடைக்கும்.

ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story