தேசிய செய்திகள்

மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு பணியில் அமர்த்திய அலோக் வர்மா நீக்கம் என தகவல் + "||" + Alok Verma Removed As CBI Chief After Selection Panel Meets

மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு பணியில் அமர்த்திய அலோக் வர்மா நீக்கம் என தகவல்

மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு பணியில் அமர்த்திய அலோக் வர்மா நீக்கம் என தகவல்
சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்க நியமனக்குழு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
 சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டனர்.

இந்த நிலையில் அலோக் வர்மாவை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பியதுடன் அவருடைய அதிகாரங்களையும் பறித்தது. இதேபோல் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அலோக் வர்மா சார்பில் மூத்த வக்கீல் பாலி எஸ்.நாரிமன் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் அவர் கூறி இருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,  நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் செவ்வாய் கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை எழுதிய தலைமை நீதிபதி விடுப்பில் இருந்ததால் தீர்ப்பை மற்ற 2 நீதிபதிகளும் வாசித்தனர். நீதிபதிகள் அமர்வு கூறியதாவது:-

சி.பி.ஐ. இயக்குனரின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது. அவர் தொடர்ந்து பணியாற்றலாம். அவரிடம் அனைத்து பொறுப்புகளையும் உடனே ஒப்படைக்க வேண்டும். அதேநேரம் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை அலோக் வர்மா கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது.

இனி, அலோக் வர்மாவுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்து நியமிக்கும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுதான் எடுக்க வேண்டும். மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் நடத்தும் விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும். தேர்வுக் குழுவின் கூட்டத்தை ஒரு வாரத்துக்குள் கூட்ட வேண்டும். சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவின் நியமனமும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவின் பதவி காலம் வருகிற 31-ந்தேதி முடிவடையும் நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் பரிந்துரையின் பேரில்தான் சி.பி.ஐ.யின் மூத்த அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்’ என்றார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தன. 77 நாட்களுக்கு அடுத்து அலோக் வர்மா தன்னுடைய பணியை மீண்டும் தொடங்கினார். முக்கிய அதிகாரிகளின் இடமாற்றத்தை ரத்துசெய்தார். 

அலோக் வர்மா நீக்கம்

இந்நிலையில் அலோக் வர்மாவின் மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க நியமனக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  டெல்லியில் பிரதமர் மோடியின் வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் ஆலோசனையை மேற்கொண்டனர். அப்போது சி.பி.ஐ. இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்க நியமனக்குழு முடிவு செய்தது என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே கடும் எதிர்ப்பை பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.