2 ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது: இஸ்ரோ


2 ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது: இஸ்ரோ
x
தினத்தந்தி 11 Jan 2019 7:14 AM GMT (Updated: 11 Jan 2019 8:14 AM GMT)

2 ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

டிசம்பர் 21 ஆம் தேதி விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதன் தலைவர் கே. சிவன் தெரிவித்தார். 


இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பட்சத்தில், இந்த திட்டத்தை நிறைவேற்றிய 4-வது நாடு என்ற பெருமையை பெறும்.  

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறியதாவது: 

“ நாடு முழுவதும் ஆறு சோதனை மையத்தையும் ஆய்வு மையத்தையும் அமைக்க உள்ளோம். இஸ்ரோவுக்கு இந்திய மாணவர்களை அழைக்க உள்ளோம். இந்திய மாணவர்கள் ஏன் நாசாவுக்கு செல்ல வேண்டும்? 

ககன்யான் திட்டத்திற்கான முதற்கட்ட பயிற்சி இந்தியாவிலும் மேம்பட்ட பயிற்சி ரஷ்யாவிலும் நடைபெறும். பெண் விண்வெளி வீராங்கனைகளும் இந்தக் குழுவில் இடம் பெறுவர். இதுதான் எங்கள் இலக்கும் கூட. 

ககன்யான்  திட்டத்திற்கான தயார் நிலைகள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரோவிற்கு இந்த திட்டம் மிகப்பெரும் திருப்பு முனையாகும். விண்வெளிக்கு இரண்டு ஆளில்லா விண்கலங்களை அனுப்புவதற்கான திட்ட இலக்கு டிசம்பர் 2020 மற்றும் ஜூலை 2021 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார். 

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா 2021 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை  செயல்படுத்தும்  என்று அறிவித்து இருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Next Story