மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமற்றது - அமித்ஷா


மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமற்றது - அமித்ஷா
x
தினத்தந்தி 11 Jan 2019 11:59 AM GMT (Updated: 11 Jan 2019 11:59 AM GMT)

மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமற்றது என அமித்ஷா கூறியுள்ளார்.

2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கும் வகையில், அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு சில வாரங்களில் வெளியாகும் நிலையில் கூட்டம் நடைபெறுகிறது.  2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் இன்று கட்சியின் தலைவர் அமித்ஷா பேசினார். நேருக்கு நேர் மோத முடியாதவர்கள், இப்போது தோல்வி பயத்தில் கூட்டமாக வருகிறார்கள். பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது என்று அவர்களுக்கு தெரியும். மோடி அரசு இந்தியாவின் மீது உள்ள உலக நாடுகளின் பார்வையை மாற்றியுள்ளது. 

2019 தேர்தல் இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு மிகவும் முக்கியமானது. இந்த தேர்தல் இளைஞர்களுக்கானது. இந்தியா ஒளிர்வதை பார்க்க விரும்பும் மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கான தேர்தலாகும். முன்னதாக பா.ஜனதா 6 மாநிலங்களில் ஆட்சி செய்தது. இப்போது 16 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. மேற்கு வங்காளத்தில் ஆட்சியமைக்கவும் நாம் தயாராகவும் உள்ளோம். 70 ஆண்டுகால புறக்கணிப்புடன் ஒப்பிடுகையில் மோடி அரசு ஏழைகளுக்காக சிறப்பான பணியை செய்துள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவதே நம்முடைய பலத்திற்கான அங்கீகாரமாகும். ஒரு நேரத்தில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் இடையிலான போட்டியாக இருந்தது. இப்போது பா.ஜனதா மற்றும் எல்லாக்கட்சிகள் இடையிலான மோதலாக மாறியுள்ளது, ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடியை அகற்றுவது சாத்தியமற்றது என்பது அவர்களுக்கு தெரியும். இது மோடியின் வலிமையை ஏற்றுக்கொள்வதாகும் என்று கூறினார் அமித்ஷா. 

Next Story