மராட்டியத்தில் 5-வது நாளாக நீடிக்கிறது ”பெஸ்ட்” பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்


மராட்டியத்தில் 5-வது நாளாக நீடிக்கிறது ”பெஸ்ட்” பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2019 5:38 AM GMT (Updated: 12 Jan 2019 5:38 AM GMT)

மராட்டியத்தில் 5-வது நாளாக ”பெஸ்ட்” பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருகிறது.

மும்பை,

மும்பையில் நஷ்டத்தில் இயங்கும் பெஸ்ட் குழுமத்தில் பணிபுரிந்து வரும் 32 ஆயிரம் பஸ் ஊழியர்கள் சம்பள உயர்வு, பெஸ்ட் குழுமத்தை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந்தேதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.  ஊழியர்களை பணிக்கு திரும்ப வைக்க பெஸ்ட் நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.

இதையடுத்து, பெஸ்ட் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும். இல்லையெனில் ஊழியர் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மாநில அரசும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது ‘மெஸ்மா’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டது.

இருப்பினும் பெஸ்ட் ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவில்லை. மும்பை மாநகராட்சியை சிவசேனா அதிகாரம் செலுத்தி வரும் நிலையில், அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பெஸ்ட் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக நேற்று முன்தினம் பல கட்டமாக பெஸ்ட் யூனியன் பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. எனவே பெஸ்ட் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் பெஸ்ட் பஸ் சேவையை பயன்படுத்தி வந்த லட்சக்கணக்கான பயணிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளானார்கள். அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோ, டாக்சிகளில் செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு முயற்சியாக யூனியன் தலைவர்களை மராட்டிய மாநில தலைமைச்செயலாளர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

Next Story