மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரவில்லை; மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு


மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரவில்லை; மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு
x
தினத்தந்தி 12 Jan 2019 9:16 AM GMT (Updated: 12 Jan 2019 9:16 AM GMT)

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரவில்லை என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  கர்நாடக அரசின் இந்த முடிவு தமிழக விவசாயிகளிடையே கடும் அதிப்தியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். குடிநீருக்கும் போதிய தண்ணீர் கிடைக்காது.

அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால் மத்திய அரசின் அனுமதிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரவில்லை என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  அணை கட்டுவது பற்றிய திட்ட அறிக்கை தயார் செய்யவே அனுமதி அளித்தோம் என்றும் அதில் தெரிவித்து உள்ளது.  தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசித்த பின்பே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story