திரிஷ்யம் படபாணியில் இளம்பெண் கொலை; பா.ஜ.க. தலைவர், 3 மகன்கள் கைது


திரிஷ்யம் படபாணியில் இளம்பெண் கொலை; பா.ஜ.க. தலைவர், 3 மகன்கள் கைது
x
தினத்தந்தி 12 Jan 2019 3:49 PM GMT (Updated: 12 Jan 2019 3:49 PM GMT)

திரிஷ்யம் படபாணியில் இளம்பெண்ணை கொன்று எரித்த பா.ஜ.க. தலைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தூர்,

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஜெகதீஷ் கரோடியா என்ற கல்லு பைல்வான் (வயது 65).  இவரது 3 மகன்கள் அஜய் (36), விஜய் (38), வினய் (31).  இவர்களின் கூட்டாளி நீலேஷ் காஷ்யப் (28).

கரோடியாவுக்கு டிவிங்கிள் டாக்ரே (வயது 22) என்ற இளம்பெண்ணுடன் தகாத தொடர்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால் கரோடியா குடும்பத்தில் விவகாரம் கிளம்பியது.  கரோடியாவுடன் வசிக்க டாக்ரே விரும்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து டாக்ரேவை கொல்ல கரோடியா மற்றும் அவரது மகன்கள் திட்டமிட்டு உள்ளனர்.  இதனை அடுத்து கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 16ந்தேதி டாக்ரேவின் கழுத்தினை நெரித்து கொலை செய்து பின் உடலை எரித்து விட்டனர்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பிரேஸ்லெட் மற்றும் பிற ஆபரணங்களை போலீசார் கண்டெடுத்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து 5 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களிடம் நடந்த விசாரணையில், கொலை செய்வதற்கு முன் நடிகர் அஜய் தேவ்கன் நடித்த திரிஷ்யம் என்ற இந்தி படத்தினை குற்றவாளிகள் பார்த்து உள்ளனர்.  அந்த படத்தில் வரும் காட்சியை போன்று, அவர்கள் நாய் ஒன்றின் உடலை ஓரிடத்தில் புதைத்து உள்ளனர்.  அதன்பின் இந்த இடத்தில் ஒரு மனித உடல் புதைக்கப்பட்டு உள்ளது என தகவலை பரப்பி விட்டு உள்ளனர்.

இதனால் போலீசார் தகவலறிந்து அந்த இடத்தில் தோண்டி உள்ளனர்.  அங்கு நாயின் உடல் கிடைத்துள்ளது.  போலீசாரின் விசாரணையை அவர்கள் திசை திருப்பி விட்டுள்ளது தெரிய வந்தது.

இந்த நிலையில், கரோடியா மற்றும் அவரது 2 மகன்களிடம் மூளை ரேகைப்பதிவு என்ற விஞ்ஞான முறையில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.  இந்தூரிலேயே முதன்முறையாக இந்த முறையில் விசாரணை நடந்து உள்ளது.  இதன் அடிப்படையில் இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது என போலீஸ் உயரதிகாரி மிஷ்ரா தெரிவித்து உள்ளார்.

Next Story