தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடுஉத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் இல்லை + "||" + Congress has no place in the Samajwadi-Bahujan Samaj coalition in Uttar Pradesh

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடுஉத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் இல்லை

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடுஉத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் இல்லை
நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என்று உடன்பாடு ஏற்பட்டது.
லக்னோ, 

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கி உள்ளன.

பரம எதிரிகள்

இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் பல்வேறு கட்சிகள் இறங்கி உள்ளன.

அதே நேரம் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடுடன் இருந்து வந்த சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் திடீரென உத்தரபிரதேசத்தில் தனியாக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

ஒரு காலத்தில் பரம எதிரிகளாக இருந்து வந்த இந்த இரு கட்சிகளும் சமீபகாலமாக இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், அதை நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர முடிவு செய்திருந்தன.

சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி

இந்த கூட்டணியில் காங்கிரசும் இணைந்து போட்டியிட விரும்பியது. ஆனால் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதாக கருதி, அந்த கட்சியை கூட்டணியில் சேர்க்க சமாஜ்வாடி தலைவர் முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் முன்னாள் முதல்-மந்திரி மாயாவதியும் தயக்கம் காட்டி வந்தனர்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

தலா 38 தொகுதிகள்

இதை அகிலேஷ் யாதவும், மாயாவதியும் நேற்று லக்னோவில் கூட்டாக செய்தியாளர்களிடம் அறிவித்தனர்.

அதன்படி உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. சிறிய கூட்டணி கட்சிகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

காங்கிரசுக்கு இடம் இல்லை

காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. காங்கிரசை தங்கள் கூட்டணியில் சேர்க்காவிட்டாலும், அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும், முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியிலும் தங்கள் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என அகிலேஷ் யாதவும், மாயாவதியும் முடிவு செய்து உள்ளனர்.

கூட்டணி அறிவிப்பை வெளியிட்ட பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, இது தொடர்பாக மேலும் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றி பெற்றது போல, வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் எங்கள் கூட்டணி பாரதீய ஜனதாவை நிச்சயம் தோற்கடிக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் கூட்டணி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் தூக்கத்தை நிச்சயம் கெடுக் கும்.

பலன் இல்லை

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலங்களில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், லஞ்சம் மற்றும் ராணுவ ஒப்பந்தங்களில் ஊழல் போன்றவை அரங்கேறி இருக்கின்றன. மேலும் முந்தைய காலங்களில் காங்கிரசுடன் கூட்டணி வைத்தும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு எந்த பலனும் இல்லை. அதனால்தான் தற்போது இந்த கூட்டணியில் காங்கிரசை சேர்க்கவில்லை.

காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்த கடந்த காலங்களில் எங்கள் கட்சியின் வாக்குகள் அந்த கட்சிக்கு சென்று இருக்கிறது. ஆனால் அந்த கட்சியின் வாக்குகள் எங்களுக்கு வரவில்லை. அந்தவகையில், சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் வாக்குகள் பரிமாற்றப்படுவது போல, காங்கிரஸ் கூட்டணியில் நடப்பது இல்லை. அதனால் காங்கிரசை சேர்ப்பதால் பலன் இல்லை.

இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலை தாண்டியும் இணைந்து இருக்கும்.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

மம்தா பானர்ஜி வரவேற்பு

அப்போது உடன் இருந்த அகிலேஷ் யாதவிடம், ‘மாயாவதி அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறதா?’ என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘கடந்த காலங்களில் பல பிரதமர்களை உத்தரபிரதேசம் வழங்கி இருக்கிறது. அந்த வரிசையில் மீண்டும் ஒருமுறை உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் (மாயாவதி) அடுத்த பிரதமர் ஆவார்’ என்று தெரிவித்தார்.

இரு கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்ததை தொடர்ந்து அந்த கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்களில் இறங்கினர். அப்போது இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

இந்த கூட்டணியை வரவேற்றுள்ள மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, இந்த நடவடிக்கையை பாராட்டி உள்ளார்.

பா.ஜனதா கருத்து

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருப்பதை பா.ஜனதா குறை கூறி இருக்கிறது.

இது குறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜும் நாட்டுக்காகவோ, உத்தரபிரதேசத்துக்காகவோ கூட்டணி வைக்கவில்லை. தங்களின் இருப்பை தக்க வைக்கவே கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள். பிரதமர் மோடியை தனியாக எதிர்க்க முடியாது என்ற எண்ணத்தில்தான் அவர்கள் இணைந்து இருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில், ‘ஊழல்வாதிகளும், குண்டர்களும் இணைந்து இருக்கிறார்கள்’ என மாநில துணை முதல்-மந்திரியும், பாரதீய ஜனதா தலைவருமான கேசவ் பிரசாத் மவுரியா குறிப்பிட்டு உள்ளார்.