காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் மோதல் - பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 2 பேர் பலி


காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் மோதல் - பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 Jan 2019 9:30 PM GMT (Updated: 13 Jan 2019 8:10 PM GMT)

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 2 பேர் இறந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள காத்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களை சரண் அடையுமாறு கேட்டுக்கொண்ட னர். ஆனால் பயங்கரவாதிகள் சரண் அடைய மறுத்ததுடன், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள், அல் பதர் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி ஜீனத் அல் இஸ்லாம், ஷகீல் அகமது தார் என தெரியவந்தது.

ஜீனத் அல் இஸ்லாம் 2006-ம் ஆண்டு முதல் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வந்தவர் ஆவார். இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பிலும் இருந்தவர். ஷகீல் அகமது தார் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. பிரேத பரிசோதனைக்கு பின்னர் இருவரின் உடல்களும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


Next Story