உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா முற்றிலும் துடைத்தெறியப்படும் -தேஜஸ்வி யாதவ்


உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா முற்றிலும் துடைத்தெறியப்படும் -தேஜஸ்வி யாதவ்
x
தினத்தந்தி 14 Jan 2019 6:57 AM GMT (Updated: 14 Jan 2019 6:57 AM GMT)

உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா முற்றிலும் துடைத்தெறியப்படும் என ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் கூறினார்.

லக்னோ,

பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றும், உத்தரபிரதேசத்தில் முற்றிலும் துடைத்தெறியப்படும் என ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்தின் மகனும், கட்சி நிர்வாகியுமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் சமாஜ் வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

அதன்படி உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. சிறிய கூட்டணி கட்சிகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. காங்கிரசை தங்கள் கூட்டணியில் சேர்க்காவிட்டாலும், அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியிலும் தங்கள் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என அகிலேஷ் யாதவும், மாயாவதியும் முடிவு செய்து உள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் நேற்று சந்தித்து பேசினார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டணி அமைக்க வேண்டும் என்ற மாயாவதி -அகிலேசின் நடவடிக்கையை மக்கள் வரவேற்கின்றனர். உ.பி., மற்றும் பீகாரில் பா.ஜ., முற்றிலும் துடைத்து எறியப்படும். உ.பி.,யில் அவர்களால் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாது. சமாஜ்வாதி -பகுஜன் சமாஜ் கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறினார்.


Next Story