கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா?


கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா?
x
தினத்தந்தி 15 Jan 2019 12:15 AM GMT (Updated: 15 Jan 2019 12:10 AM GMT)

கர்நாடகத்தில், தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா இழுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதனால் அங்கு குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் 12-ந்தேதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

மொத்தம் உள்ள 224 இடங்களில் பாரதீய ஜனதா 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரசுக்கு 82 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 38 இடங்களும் கிடைத்தன.

அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா முதல்-மந்திரியாக முதலில் பதவி ஏற்றார். ஆனால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் அவர் பதவி விலகினார். இதனால் ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அங்கு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த குமாரசாமி இருந்து வருகிறார்.

மொத்தம் 34 மந்திரிகள் பதவி ஏற்கலாம் என்ற நிலையில் மந்திரி பதவிகளை காங்கிரசும், ஜனதா தளம் எஸ் கட்சியும் முறையே 22 மற்றும் 12 என்று பிரித்துக்கொண்டன. மந்திரி பதவியை பிடிப்பதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்தது.

பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். சிலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் சமீபத்தில் மந்திரி பதவி பறிக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி முக்கியமானவர் ஆவார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் ‘ஆபரேஷன் தாமரை’ என்ற குதிரை பேர நடவடிக்கையை எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா தொடங்கி இருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங், நாகேந்திரா ஆகியோர் திடீரென்று மாயமாகிவிட்டனர். அவர்கள் மும்பையில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களுடன் காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இவர்கள் தவிர பி.சி.பட்டீல், கணேஷ் ஜூக்கேரி, பீமாநாயக், ஹொலகேரி, உமேஷ் ஜாதவ், பிரதாப் பட்டீல் உள்ளிட்ட 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த 12 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணியில் சிக்கல் உருவாகி, குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சியை காப்பாற்றும் முயற்சியாக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று பெங்களூருவில் காங்கிரஸ் மந்திரிகளுக்கு விருந்து கொடுத்தார். அப்ே-்பாது மந்திரிகள் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும், கட்சி தாவும் எண்ணத்தில் இருப்பவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்-மந்திரி குமாரசாமி துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, தங்கள் எம்.எல்.ஏ.க்களை முதல்-மந்திரி குமாரசாமி இழுக்க முயற்சிப்பதாக பாரதீய ஜனதா குற்றம்சாட்டி இருக்கிறது.

இதுபற்றி முன்னாள் முதல்- மந்திரியும் கர்நாடக பாரதீய ஜனதா தலைவருமான எடியூரப்பா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடவில்லை. குமாரசாமிதான் பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார். எங்களது எம்.எல்.ஏ.க்களை இழுக்க அவர்தான் பணம், பதவி ஆசை காட்டி உள்ளார். எனவே பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க நாங்கள் அவர்களை டெல்லியில் தங்க வைத்து உள்ளோம்” என்றார்.

பாரதீய ஜனதா எம்.எல். ஏ.க்கள் டெல்லி அருகே அரியானாவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசை கவிழ்ப்பதில் மாநில பாரதீய ஜனதா ஆர்வம் காட்டி வருவதாகவும், ஆனால் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அக்கட்சி மேலிடம் அதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

Next Story