அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 2019 கல்வியாண்டு முதல் 10% இடஒதுக்கீடு அமல்; மத்திய மந்திரி ஜாவடேகர்


அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 2019 கல்வியாண்டு முதல் 10% இடஒதுக்கீடு அமல்; மத்திய மந்திரி ஜாவடேகர்
x
தினத்தந்தி 15 Jan 2019 3:25 PM GMT (Updated: 15 Jan 2019 3:25 PM GMT)

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வருகிற 2019ம் கல்வியாண்டு முதல் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய மந்திரி ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு என சுமார் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆனால் பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை. எனினும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  இதன்பின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதன் முடிவில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெருமளவிலான உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது.

இந்த நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வருகிற 2019ம் கல்வியாண்டு முதல் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

Next Story