கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே


கர்நாடகாவில் கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது; மல்லிகார்ஜுன கார்கே
x
தினத்தந்தி 16 Jan 2019 11:11 AM GMT (Updated: 16 Jan 2019 11:11 AM GMT)

கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடகாவில் கடந்த வருடம் நடந்த சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அங்கு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நேற்று வாபஸ் பெர்றுள்ளனர்.  எச் நாகேஷ் மற்றும் ஆர். சங்கர் ஆகிய இரு சுயேட்சை எம்.எல்,ஏ.க்கள் கவர்னர்ருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கர்நாடக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதாக கூறினர்.

இதுபற்றி சங்கர் கூறும்பொழுது, அரசில் ஒரு மாற்றம் வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.  அரசு திறமையுடன் இருக்க வேண்டும்.  அதனால் எனது ஆதரவை (கர்நாடக அரசுக்கு அளித்து வந்த) வாபஸ் பெறுகிறேன் என கூறினார்.

இதேபோன்று நாகேஷ் கூறும்பொழுது, நல்ல மற்றும் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அரசுக்கு ஆதரவு வழங்கினேன்.  ஆனால் இது முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது.  கூட்டணியினரிடையே புரிதல் இல்லை.  அதனால் நிலையான ஆட்சி அமைய பாரதீய ஜனதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன்.  அந்த அரசு கூட்டணி அரசை விட சிறப்புடன் செயல்படும் என கூறினார்.

இந்த வாபஸ் அறிவிப்புக்கு பின்னர் கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றால் என்ன என கூறியதுடன், என்னுடைய வலிமை எனக்கு தெரியும்.  எனது அரசு நிலையாக உள்ளது என்று கூறினார்.

இந்த நிலையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை.  அரசு நிலையாகவும் வலிமையுடனும் உள்ளது.  தொடர்ந்து இதேபோல் செயல்படும் என கூறினார்.

அரசின் நிலைத்தன்மையை சீர்குலைக்க பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Next Story