மும்பையில் 9 நாளாக தொடர்ந்த பெஸ்ட் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்; பயணிகள் மகிழ்ச்சி


மும்பையில் 9 நாளாக தொடர்ந்த பெஸ்ட் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்; பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 16 Jan 2019 12:16 PM GMT (Updated: 16 Jan 2019 12:16 PM GMT)

மும்பையில் கடந்த 9 நாளாக தொடர்ந்த பெஸ்ட் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

மும்பை,

மும்பையில் பஸ் சேவைகளை இயக்கி வரும் பெஸ்ட் குழுமத்தில் பணிபுரிந்து வரும் 32 ஆயிரம் ஊழியர்கள் கடந்த 7-ந்தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.

சம்பள உயர்வு, மாநகராட்சி பட்ஜெட்டுடன் பெஸ்ட் குழும பட்ஜெட்டை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் நகரில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்து போனது. ஒரு பஸ் கூட ஓடவில்லை.

மும்பைவாசிகள் பஸ் சேவை கிடைக்காமல் பரிதவித்தனர். பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில்கள் மற்றும் மோனோ ரெயில்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அலைமோதியது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

தனியார் வாகனங்கள் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்பட்டன.  ஆனால் தனியார் வாகனங்களில் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.

இதனால் நகரில் இயங்க வேண்டிய 3,200 பஸ்களும் டெப்போக்களில் முடங்கின. பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

இந்த நிலையில், கடந்த 9 நாளாக நடந்து வந்த 32 ஆயிரம் பெஸ்ட் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.  இதனால் லட்சக்கணக்கான பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.  உடனடியாக பெஸ்ட் பேருந்துகள் இயங்க தொடங்கும் என யூனியன் தலைவர் சஷாங் ராவ் கூறியுள்ளார்.

பெஸ்ட் பஸ் ஊழியர்களுக்கு 10 வழிகளில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என இடைக்கால நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து வேலை நிறுத்தத்தினை வாபஸ் பெறுவது என தொழிலாளர் யூனியன் முடிவு செய்தது.

மும்பையில் உள்ளூர் ரெயில்களுக்கு அடுத்து பயணிகளுக்கான 2வது மிக பெரிய போக்குவரத்து முறையாக பெஸ்ட் பஸ் போக்குவரத்து இருந்து வருகிறது.  இவற்றில் நாளொன்றுக்கு 80 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

Next Story