பெண்களின் கன்னித்தன்மை பற்றி சர்ச்சை பதிவு; பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு


பெண்களின் கன்னித்தன்மை பற்றி சர்ச்சை பதிவு; பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு
x
தினத்தந்தி 16 Jan 2019 12:55 PM GMT (Updated: 16 Jan 2019 12:55 PM GMT)

பெண்களின் கன்னித்தன்மை பற்றி சர்ச்சை பதிவு வெளியிட்ட ஜாதவ்பூர் பல்கலை கழக பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை வேந்தர் கூறியுள்ளார்.

கொல்கத்தா,

பெண்களின் கன்னித்தன்மை சீலிடப்பட்ட புட்டி போல் அல்லது சீலிடப்பட்ட பேக்கெட் போன்று இருக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய பதிவை தனது முகநூலில் ஜாதவ்பூர் பல்கலை கழக பேராசிரியர் கனக் சர்க்கார் என்பவர் வெளியிட்டார்.  நீங்கள் குளிர்பானம் நிறைந்த புட்டியின் சீல் உடைபட்டு இருப்பின் அல்லது பிஸ்கெட் பேக் உடைபட்டு இருப்பின் வாங்குவீர்களா?

இதுவே உங்கள் மனைவி விசயத்திலும்.  ஒரு கன்னித்தன்மை கொண்ட பெண் என்பவள் பிறந்ததில் இருந்து கலாசாரம், பாலியல் சுகாதாரம் என எண்ணற்ற முறைகள் அவளுடன் இணைந்திருக்கும்.  கன்னித்தன்மையுடனான மனைவி ஒருவருக்கு அமைவது தேவதை போன்றது என தெரிவித்து உள்ளார்.

இந்த சர்ச்சை பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் உடனடியாக அதனை அவர் அழித்து விட்டார்.

ஆனால் அவரது பதிவு ஸ்கிரீன்ஷாட் செய்யப்பட்டு அது வைரலாக பரவியது.  இதனை தொடர்ந்து அவரது வகுப்புகளை மாணவர்கள் புறக்கணித்தனர்.  இதுபற்றி மேற்கு வங்காள மகளிர் ஆணையம் அவரிடம் விளக்கம் அளிக்கும்படி தெரிவித்துள்ளது.

இந்த தகவல் அறிந்த பல்கலை கழக துணைவேந்தர் சுரஞ்ஜன் தாஸ், இது கல்வி நிறுவனத்தின் மதிப்பினை சீர்குலைத்துள்ளது.  பேராசிரியருக்கு எதிராக விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர் ஓர் ஆசிரியர்.  கடந்த காலங்களில் வகுப்பறைகளிலும் அவர் இதுபோன்று கண்டிக்கத்தக்க வகையிலான கருத்துகளை பேசியுள்ளார் என எனக்கு தெரிய வந்துள்ளது.  முகநூலில் பதிவு இட்டுள்ள நிலையில் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

Next Story