சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்த பெண்ணுக்கு வீட்டில் அடி–உதை


சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்த பெண்ணுக்கு வீட்டில் அடி–உதை
x
தினத்தந்தி 16 Jan 2019 10:45 PM GMT (Updated: 16 Jan 2019 9:21 PM GMT)

கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (வயது 44), பிந்து (42) ஆகிய 2 பெண்கள் கடந்த 2–ந் தேதி பலத்த பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.

திருவனந்தபுரம், 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (வயது 44), பிந்து (42) ஆகிய 2 பெண்கள் கடந்த 2–ந் தேதி பலத்த பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு கருதி போலீசார் இருவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்தநிலையில் கனகதுர்கா நேற்றுமுன்தினம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தலமன்னாவில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அப்போது சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது தொடர்பாக கனகதுர்காவுக்கும், அவரது மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கனகதுர்காவை அவரது மாமியார் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, கனகதுர்கா தாக்கியதில் அவரது மாமியாரும் காயம் அடைந்தார். அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story