குதிரை பேரத்தில் முதல் மந்திரி குமாரசாமிதான் ஈடுபடுகிறார்: எடியூரப்பா


குதிரை பேரத்தில் முதல் மந்திரி குமாரசாமிதான் ஈடுபடுகிறார்: எடியூரப்பா
x
தினத்தந்தி 17 Jan 2019 4:49 AM GMT (Updated: 17 Jan 2019 4:49 AM GMT)

குதிரை பேரத்தில் முதல் மந்திரி குமாரசாமிதான் ஈடுபடுகிறார் என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதாக முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். 

அதே நேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை, முதல்-மந்திரி குமாரசாமி இழுக்க முயற்சிப்பதாக கூறி அவர்கள் (பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள்) கடந்த 3 நாட்களாக டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள ஓட்டல்களில் முகாமிட்டு இருந்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபோன்று எதுவும் நேற்று நடைபெறவில்லை. 

இதற்கு மத்தியில், “அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை. எனது பலம் என்ன என்பது எனக்கு தெரியும். கூட்டணி அரசு வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. எனவே கவலைப்பட தேவையில்லை. இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவிப்பதால் என்ன நடந்துவிடப்போகிறது? என்று குமாரசாமி கூறியிருந்தார். 

இந்த நிலையில், ஏஎன்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, ” நாங்கள் யாரையும் இழுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. குதிரை பேரத்தில் குமாரசாமிதான் ஈடுபடுகிறார். பாரதீய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. பணம் தருவதாகவும் மந்திரி பொறுப்பு தருவதாகவும் முதல் மந்திரி குமாரசாமி கூறி எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிக்கிறார்” என்றார். 

Next Story