மேகாலயா: சுரங்கத்தொழிலாளி ஒருவரின் உடல் கிடக்கும் இடம் கண்டுபிடிப்பு


மேகாலயா: சுரங்கத்தொழிலாளி ஒருவரின் உடல் கிடக்கும் இடம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2019 5:56 AM GMT (Updated: 17 Jan 2019 5:56 AM GMT)

மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளி ஒருவரின் உடல் கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்தது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது. சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்த தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும் வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி வளை’ என்று அழைக்கப்படுகிறது.

கடந்த 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினர், நீர் மூழ்கி வீரர்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஏறத்தாழ ஒரு மாத போராட்டத்திற்கு பின்பு, சுரங்கத்திற்குள் இறந்த நிலையில், கிடக்கும் ஒரு தொழிலாளியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  நீருக்கடியில் உள்ளதை கண்டுபிடிக்கும் நவீன  தானியங்கி கருவி மூலம், உடல் கிடப்பதை கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் கண்டனர். 210 அடி ஆழம் கொண்ட சுரங்கத்திற்குள் தோராயமாக 60 அடி  ஆழத்தில் உடல் கிடக்கும் என்று இந்திய விமானப்படை செய்தி தொடர்பாளர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  அந்த உடலை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இருப்பினும் மற்றவர்களின் நிலை என்னவென்பது இதுவரை தெரியவில்லை. தொழிலாளர்களின் உறவினர்களோ சுரங்கத்தினுள் இன்னும் தொழிலாளர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. அவர்களின் சடலத்தையாவது மீட்டுத் தாருங்கள் என்று வேண்டியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story