மேகாலயா சுரங்கத்தில் தொழிலாளர்களை தேடும் பணி தீவிரம், எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு


மேகாலயா சுரங்கத்தில் தொழிலாளர்களை தேடும் பணி தீவிரம், எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2019 12:01 PM GMT (Updated: 17 Jan 2019 12:01 PM GMT)

மேகாலயா சுரங்கத்தில் தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, எலும்புக்கூடுகளை கடற்படை வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஷில்லாங்,

மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது. சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 
 
இந்த தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி வளை’ என்று அழைக்கப்படுகிறது.

கடந்த மாதம் 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர். ஏறத்தாழ ஒரு மாதம் நெருங்கியுள்ள நிலையில், மீட்பு பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மீட்புப் பணிகளில் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் பணியாளர்களும், இந்தியக் கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.  
 
சுரங்கத்தில் தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே எலும்புக்கூடுகளை கடற்படை வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சுரங்கங்களில் உள்ள சல்பர் காரணமாக உடல் சிதைந்து இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கிடையே உடலை அடையாளம் காண டிஎன்ஏ சோதனைக்கும் தேவையான ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்பட்டு வருகிறது.

Next Story