டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டி ஆம் ஆத்மி அறிவிப்பு


டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டி ஆம் ஆத்மி அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2019 11:10 AM GMT (Updated: 18 Jan 2019 11:10 AM GMT)

டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

2019 தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று பிற எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதில் ஒருமித்த கருத்து தென்படவில்லை. உ.பி.யில் காங்கிரசை கழற்றிவிட்டு சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணியை அறிவித்துள்ளது. மேற்கு வங்காளம், ஆந்திராவிலும் அதே நிலைதான் ஏற்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையே எதிர்க்கட்சிகள் வரிசையில் இருக்கும் ஆம் ஆத்மியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. 

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி என்பதை மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா திட்சித் மறுத்துவிட்டார். பஞ்சாப்பை பொறுத்தவரையில் ஆம் ஆத்மிக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது என முதல்வர் அமரீந்தர் சிங் கூறிவிட்டார். காங்கிரசுக்கு எதிரான போக்கை கொண்டிருந்த ஆம் ஆத்மி மகா கூட்டணியில் இடம்பெறுமா? என்ற கேள்வி வலுப்பெற்றது. இந்நிலையில், 
டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் பேசுகையில், “நாங்கள் தொடக்கத்திலிருந்தே காங்கிரசின் கொள்கைக்கு எதிராக உள்ளோம். பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதன் காரணமாக ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் காங்கிரசுடன் கூட்டணி என்ற சொல் அடிப்பட்டது. அரசியல் ரீதியாக வேறுபாடு இருந்தாலும் பா.ஜனதாவிற்கு எதிராக இணைவது அவசியம் என கூறப்பட்டது. காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு அவர்களின் அகங்காரத்தை காட்டுகிறது, எனவே நாங்கள் டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளோம்,” என கூறியுள்ளார். 

Next Story