இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ் செயற்கை கோள்களை உருவாக்குவது பற்றி மாணவர்களுக்கு பயிற்சி : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி


இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ் செயற்கை கோள்களை உருவாக்குவது பற்றி மாணவர்களுக்கு பயிற்சி : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
x
தினத்தந்தி 18 Jan 2019 10:27 PM GMT (Updated: 18 Jan 2019 10:27 PM GMT)

இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் செயற்கை கோள்களை உருவாக்குவது பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

புதுடெல்லி, 

விண்வெளியை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும் விண்வெளிக்கு மனிதர்கள் 3 பேரை அனுப்பி ஆய்வு செய்யும் ககன்யான் திட்டத்தை வருகிற 2022–ம் ஆண்டுக்குள் செயல்படுத்த இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கான ஆயத்த பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மேற்கொண்டு உள்ளது.

இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

விண்வெளி துறையில் இளம் விஞ்ஞானிகளையும், ஆய்வுகளையும் ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. இதில் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு செயற்கை கோள்களை உருவாக்குவது தொடர்பாக ஒரு மாதம் செய்முறை பயிற்சி அளிக்கப்படும். இதற்காக பெரும்பாலும் 8–ம் வகுப்பு நிலையில் உள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான செலவை இஸ்ரோ ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்துக்கு மாநில அரசுகளும், கல்வி நிறுவனங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இதேபோல் இளம் விஞ்ஞானிகள் செயற்கை கோள்களை உருவாக்கும் வகையில் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். இந்த ஆய்வு மையங்களில் இளம் விஞ்ஞானிகள் உருவாக்கும் செயற்கை கோள்களை இஸ்ரோ வாங்கிக்கொள்ளும்.

விண்வெளி துறையில் தொடக்க நிலையில் வளர்ந்து வருபவர்களை ஊக்குவிப்பதற்கான ஆய்வு மையங்கள் திருச்சி, நாக்பூர், ரூர்க்கெலா, இந்தூர் நகரங்களில் ஏற்படுத்தப்படும். ஏற்கனவே திரிபுரா மாநிலத்தில் இதுபோன்ற ஆய்வு மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.

தற்போது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை இஸ்ரோ தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த ராக்கெட் தயாரிப்பு திட்டம் முதல் முறையாக தொழில்துறையினரிடம் வழங்கப்பட இருக்கிறது.

விண்வெளி ஆய்வில் இந்தியா, சீனாவுக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு மேலும் 54 செயற்கை கோள்கள் தேவைப்படுகின்றன. அவற்றை விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை இஸ்ரோ மேற்கொண்டு உள்ளது. இதற்காக, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் மையம் என்ற பெயரில் இஸ்ரோவில் தனி மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் முதல் கட்டமாக அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் ஆள் இல்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்படும். 2–வது கட்டமாக 2021–ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் ஆள் இல்லா விண்கலம் அனுப்பப்படும்.

அதன்பிறகு, ககன்யான் திட்டத்தின் கீழ் 2021–ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் விண்கலத்தின் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இதற்காக விண்வெளி வீரர்களை தேர்வு செய்வது, விண்கலம் ஆய்வுப்பணி ஆகியவை இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும். விண்வெளியில் வீரர்களை சுமந்தபடி சுற்றிவரும் விண்கலத்திற்கான வடிவமைப்பு 2 அல்லது 3 வாரங்களில் இறுதி செய்யப்படும். அதன்பிறகு சோதனை தொடங்கும்.

விண்வெளிக்கு செல்லும் வீரர்களை தேர்வு செய்வது, அவர்களுக்கு பயிற்சி அளிப்பது ஆகியவற்றில் இந்திய விமானப்படை முக்கிய பங்கு வகிக்கும். இந்த வி‌ஷயத்தில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகளிடம் இருந்து தொழில்நுட்ப உதவிகள் பெறப்படும்.

இவ்வாறு கே.சிவன் கூறினார்.

உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக தனியாக செயற்கை கோள் அனுப்பப்படுமா? என்று கேட்டதற்கு, அதுபற்றிய தேவைகள் மற்றும் பிற அம்சங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவர் பதில் அளித்தார்.

இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில், ககன்யான் திட்டத்தின் கீழ் விண்ணுக்கு அனுப்ப, விமானத்தில் பறந்த அனுபவம் பெற்றவர்களை தேடி வருவதாக தெரிவித்தார். எனவே அனுபவம்மிக்க விமானப்படை விமானிகள் விண்ணுக்கு செல்வதற்கு தேர்ந்து எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.


Next Story