மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பது தான் 2-வது சுதந்திர போராட்டம் -மு.க.ஸ்டாலின்


மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பது தான் 2-வது சுதந்திர போராட்டம் -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 19 Jan 2019 8:21 AM GMT (Updated: 19 Jan 2019 8:58 AM GMT)

‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற தலைப்பில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பது தான் 2-வது சுதந்திர போராட்டம் என மு.க ஸ்டாலின் பேசினார்.

கொல்கத்தா,

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெறு கிறது.  மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு முயற்சியாக மேற்கு வங்க முதல் மந்திரியும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு அனுப்பியுள்ளார். 

அதன்படி  கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக, மம்தா பானர்ஜி தலைமையில் மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் ஸ்டாலின், தேவேகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, அரவிந்த கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்)  , மல்லிகார்ஜூன கார்கே ( காங்கிரஸ்) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

முன்னாள் மத்திய மந்திரிகள்  யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி  ஆகியோரும் கலந்து கொண்டனர். ஹிர்த்திக் படேல், ஜிக்னேஷ்மேவானி , சத்ருகன் சின்கா  ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  பெங்காலியில்  பேச்சை தொடங்கினார். ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

வங்க புலிகளுக்கு எனது வணக்கம் வங்கத்து விவேகானந்தருக்கு  குமரியில்  நினைவு மண்டம் அமைத்து உள்ளோம்.  சுதந்திர  போராட்டத்தில் தமிழகமும் வங்கமும் முக்கிய பங்காற்றி உள்ளது. 

மே மாதம் வரவிருக்கும் பொதுத் தேர்தல்  நாட்டின் இரண்டாம் சுதந்திரப் போராட்டமாக இருக்கும் இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜியின் அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ளேன்.  மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் 2-வது சுதந்திர போராட்டம். 

இந்த மேடையில் நான் இந்தியாவை பார்க்கிறேன்,. வேறு  மொழியை சேர்ந்தவர்களும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு அமர்ந்து உள்ளார்கள். வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் தாரக மந்திரம் 

மம்தா பானர்ஜி இரும்பு பெண்மணி ஆவார்.  எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பிரதமர் மோடிக்கு பயமாக இருக்கிறது. பிரதமர் மோடிக்கு பயம் வந்து விட்டது. நமது ஒற்றுமை மோடியை பயங்கொள்ள வைத்துள்ளது. இதன் மூலம்  இந்தியாவை காப்போம்.

மக்களை ஏமாற்றி  ஆட்சிக்கு வந்தவர் மோடி நூறு கூட்டங்களில்  பேசினால்  ஆயிரம் பொய்களை சொல்லி இருப்பார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது இதுதான் மோடியின் சாதனை. 

இது மக்களுக்குக்கான ஆட்சி அல்ல இது கார்ப்பரேட் அரசு.

வங்கியில் ரூ. 15 லட்சம் பணத்தை போடுவேன் என்றவர்  மக்களின் தலையில் கல்லை போட்டார்.  வாயில் மண்ணை போட்டார். 

ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெறவில்லையா? ரூ,.1000 ரூ.500 ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்ததன் பின்னணியில் ஊழல், இல்லையா?

பாஜகவை தனியாக வீழ்த்த முடியாது நாம் அனைவரும் ஒன்றிணைந்து வீழ்த்த  வேண்டும். 

 நரேந்திர மோடி  பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி.

இந்த சிறப்பான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.

Next Story