மகா கூட்டணி பணக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளின் கூட்டணியாகும் - பிரதமர் மோடி தாக்கு


மகா கூட்டணி பணக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளின் கூட்டணியாகும் - பிரதமர் மோடி தாக்கு
x
தினத்தந்தி 20 Jan 2019 10:02 AM GMT (Updated: 20 Jan 2019 10:02 AM GMT)

மகா கூட்டணி பணக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளின் கூட்டணியாகும் என பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில், பாரதீய ஜனதாவுக்கு எதிராக 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் திரண்டனர். மாநாட்டில் பேசிய அவர்கள், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார்கள்.

பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், மோடி அரசின் காலாவதி தேதி முடிந்து விட்டது: பிரதமர் யார் என்று தேர்தலுக்கு பிறகு முடிவு செய்வோம் என்றார். 

பிரதமர் மோடி நேற்று பதிலடி கொடுக்கையில், பொது மக்களின் பணத்தை சிலர் (எதிர்க்கட்சிகள்) கொள்ளையடித்து வந்தனர். ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகள், அவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றின. இதனால் அவர்கள் கோபமடைந்தனர். அவர்கள்தான் மகா கூட்டணி அமைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்தார். 

இந்நிலையில் பா.ஜனதா தொண்டர்களிடம் வீடியோ காலிங் மூலம் உரையாடிய பிரதமர் மோடி, “அவர்கள் தங்களுக்குள் கூட்டணியை வைக்கிறார்கள். நாம் 125 கோடி மக்களுடன் கூட்டணியை வைத்துள்ளோம். எந்த கூட்டணி பலம் வாய்ந்தது? கொல்கத்தா மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள்  செல்வாக்கு கொண்டவர்களின் வாரிசு அல்லது அவர்களது சொந்த குழந்தைகளை அரசியலில் வளர்க்க முயற்சி செய்பவர்கள்.  அவர்கள் ஒன்றாக இணைகிறார்கள். பணக்காரர்களின் கூட்டணியாகும். மாமன், மச்சான் கூட்டணியாகும். ஊழல், எதிர்மறை, உறுதியற்றநிலை, சமத்துவமில்லாத கூட்டணியாகும்,” என விமர்சனம் செய்துள்ளார். 

Next Story