மம்தாவின் பேரணி ஜனநாயகத்தை காக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது - சத்ருகன் சின்கா


மம்தாவின் பேரணி ஜனநாயகத்தை காக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது -  சத்ருகன் சின்கா
x
தினத்தந்தி 20 Jan 2019 11:24 AM GMT (Updated: 20 Jan 2019 11:24 AM GMT)

மம்தாவின் பேரணி ஜனநாயகத்தை காக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது என சத்ருகன் சின்கா கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன.   எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக, மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தா நகரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில், பாரதீய ஜனதாவுக்கு எதிராக 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் திரண்டனர். 

மாநாட்டில் பேசிய அவர்கள், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார்கள். மோடி ஆட்சியில், மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், நாட்டில் ஒற்றுமை சீர்குலைந்து விட்டதாகவும், நாடு முன்னேற்றம் காணவில்லை என்றும் குறை கூறினார்கள். யஷ்வந்த் சின்கா பேசுகையில், பாரதீய ஜனதா ஆட்சியில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், அதை காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றாக திரண்டு இருப்பதாகவும் கூறினார்.

பா.ஜனதா எம்.பி. சத்ருகன் சின்கா பேசுகையில், அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும், நாட்டுக்கு புதிய தலைவர் தேவைப்படுவதாகவும் கூறினார்.

இந்நிலையில் பா.ஜனதா தலைமை மற்றும் மோடியின் அரசை மீண்டும் விமர்சனம் செய்யும் வகையில் சத்ருகன் சின்கா, மம்தாவின் பேரணி ஜனநாயகத்தை காக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது என கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் மாநாட்டில் கலந்து கொண்ட பா.ஜனதா எம்.பி. சத்ருகன் சின்கா, வாஜ்பாய்-அத்வானி ஆட்சியின் போது ஜனநாயகம் இருந்தது, ஆனால் அமித்ஷா மற்றும் மோடியின் தலைமையின் கீழ் சர்வாதிகாரம் ஏற்பட்டுள்ளது என விமர்சனம் செய்துள்ளார். ஜனநாயகம் அழிக்கப்படுவதிலிருந்து காக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டேன் என கூறியுள்ளார். 

Next Story