மாயாவதி பற்றி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. அவதூறு பேச்சு, போலீஸ் வழக்குப்பதிவு


மாயாவதி பற்றி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. அவதூறு பேச்சு, போலீஸ் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 20 Jan 2019 1:29 PM GMT (Updated: 20 Jan 2019 1:29 PM GMT)

மாயாவதி பற்றி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. அவதூறாக பேசியது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.


லக்னோ,  

உத்தரபிரதேச மாநிலம் சந்தாலியில் பாரதீய ஜனதா கட்சி பெண் எம்.எல்.ஏ. சாதனா சிங் பேசுகையில்,  பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியை சரமாரியாக விமர்சித்துள்ளார். 

சந்தாலி பேசுகையில் ‘‘உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரி மாயாவதி ஆணா, பெண்ணா என எனக்கு தெரியவில்லை. கண்ணியம் என்றால் என்னவென்றே அவர் புரிந்து கொள்ளவில்லை. மகாபாரதத்தில் திரவுபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அவர் அதற்காக பழிவாங்க சபதம் செய்தார். அவர் சுயமரியாதையுள்ள பெண். ஆனால் இந்தப் பெண்ணை (மாயாவதி) பாருங்கள். அவர் அதிகாரத்துக்காக கண்ணியத்தை விற்பனை செய்து விட்டார்’’ என கூறியதாக தெரிய வந்துள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, தனது அரசியல் எதிரியாக விளங்கிய சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதையே சாதனா சிங் இப்படி விமர்சித்ததாக தெரிகிறது. இந்த விவகாரத்தை பத்திரிகை தகவல்கள் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. பல்வேறு தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாயாவதி பற்றி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. அவதூறாக பேசியது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Next Story