10 சதவீத இடஒதுக்கீடு: பா.ஜனதாவுக்கு 10 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைக்கும் - மத்திய மந்திரி

10 சதவீத இடஒதுக்கீட்டால் வருகிற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 10 சதவீத கூடுதல் வாக்குகளை பெற்றுத்தரும் என மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
புதுடெல்லி,
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்காக 10 சதவீத இடஒதுக்கீடு முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவினர் வரவேற்ற அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ன? என்று எதிர்க்கட்சிகள் கேள்வியை எழுப்பின. இந்நிலையில் 10 சதவீத இடஒதுக்கீட்டால் வருகிற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 10 சதவீத கூடுதல் வாக்குகளை பெற்றுத்தரும் என மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
ராம்விலாஸ் பஸ்வான் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மோடி தலைமையிலான அரசு நீண்டகால வளர்ச்சி திட்ட கொள்கை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்படுத்தி வருகிறது. நாட்டில் நிலையான ஆட்சிக்கு திறமையான பிரதமரையும் நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். சமீபத்தில் நடந்த சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநில தேர்தல்களில் ஆட்சியை பாரதீய ஜனதா இழந்துள்ளது. இதன் மூலம் அக்கட்சி பாடம் கற்றுக்கொண்டு உள்ளது. இதன்அடிப்படையில் மக்கள் செல்வாக்கை பெறும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் வருகிற தேர்தலில் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு உள்ளது. இந்த சட்டத்தினால் பாரதீய ஜனதாவுக்கு வருகிற தேர்தலில் 10 சதவீத ஓட்டுகள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story