2019 தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை நடத்த திமுக குழு அமைப்பு


2019 தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை நடத்த திமுக குழு அமைப்பு
x
தினத்தந்தி 20 Jan 2019 2:01 PM GMT (Updated: 20 Jan 2019 2:01 PM GMT)

2019 தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை நடத்த திமுக குழுவை அமைத்துள்ளது.


தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட இருக்கின்றன. இந்த இரு அணிகளிலும் இடம்பெறாத கட்சிகளை ஒருங்கிணைத்து 3-வது அணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் எந்த கட்சி எந்த அணியில் இருக்கும் என்பது தெரியவரும். தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வைக்கிறது. பிற கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைகிறது. கொல்கத்தாவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தல் 2-ம் சுதந்திர போராட்டம்: பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து மாநில கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று கோரியிருந்தார். தேர்தலுக்கான பணியை திமுக தொடங்கிவிட்டது. 
 
இப்போது 2019 தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை நடத்த திமுக குழுவை அமைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களாக இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  2019 தேர்தல் அறிக்கையை தயார் செய்ய 8 பேர் கொண்ட குழுவையும் திமுக அமைத்துள்ளது. இதில் டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி. துரைசாமி, கனிமொழி எம்.பி., திருச்சி சிவா, ஆ. ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், அ. ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 


Next Story