நாட்டின் நிலைமை, மோடி இல்லை என்றால் அராஜகம்தான் இருக்கும் - பிரகாஷ் ஜவடேகர்


நாட்டின் நிலைமை, மோடி இல்லை என்றால் அராஜகம்தான் இருக்கும் - பிரகாஷ் ஜவடேகர்
x
தினத்தந்தி 20 Jan 2019 3:10 PM GMT (Updated: 20 Jan 2019 3:10 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு மாற்று யார் என்று சொல்லுங்கள்? என எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.


புனே, 


விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக மம்தா பானர்ஜி ஏற்பாட்டில்  கொல்கத்தாவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு எதிராக ஆவேச கருத்துக்களை வெளியிட்டனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு ஊழல் கூட்டணி அமைத்திருப்பதாக எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக தாக்கியுள்ளார். இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு மாற்று யார் என்று சொல்லுங்கள்? என எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.  

புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியும், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர்,  கொல்கத்தாவில்  எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றன. இந்த கட்சிகள் அனைத்தும் பிரதமர் பதவியில் இருந்து மோடியை வெளியேற்ற வேண்டும் என்று விரும்புவது நிரூபணமாகி உள்ளது. சரி. அப்படியென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு மாற்று யார் என்று சொல்லுங்கள்? அவர்களால் (எதிர்க்கட்சிகளால்) மாற்று என ஒரு தலைவரை வழங்க முடியாது.

 எனவே நாட்டின் நிலைமை, மோடி இல்லை என்றால் அராஜகம்தான் இருக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்றதை விட கூடுதல் இடங்களை பாரதீய ஜனதா கட்சி கைப்பற்றும். ஓட்டு விகிதாசாரமும் அதிகரிக்கும் என்று கூறினார். 

Next Story