மாயாவதி குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் பாஜக பெண் எம்.எல்.ஏ


மாயாவதி குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் பாஜக பெண் எம்.எல்.ஏ
x
தினத்தந்தி 21 Jan 2019 3:08 AM GMT (Updated: 21 Jan 2019 3:08 AM GMT)

மாயாவதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சாதனா சிங் எம்.எல்.ஏ, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம், சந்தாலி என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி பெண் எம்.எல்.ஏ. சாதனா சிங் பேசினார். அப்போது அவர் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியை சரமாரியாக விமர்சித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, ‘‘உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரி மாயாவதி ஆணா, பெண்ணா என எனக்கு தெரியவில்லை. கண்ணியம் என்றால் என்னவென்றே அவர் புரிந்து கொள்ளவில்லை. மகாபாரதத்தில் திரவுபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அவர் அதற்காக பழிவாங்க சபதம் செய்தார். அவர் சுயமரியாதையுள்ள பெண். ஆனால் இந்தப் பெண்ணை (மாயாவதி) பாருங்கள். அவர் அதிகாரத்துக்காக கண்ணியத்தை விற்பனை செய்து விட்டார்’’ என கூறியதாக தெரிய வந்துள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, தனது அரசியல் எதிரியாக விளங்கிய சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதையே சாதனா சிங் இப்படி விமர்சித்ததாக தெரிகிறது.  இந்த விவகாரத்தை பத்திரிகை தகவல்கள் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துகொண்டதுடன்,  மாயாவதி பற்றி அவதூறாக பேசியதாக வெளிவந்துள்ள தகவல்கள் பற்றி விளக்கம் அளிக்குமாறு கேட்டு சாதனா சிங்குக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தது. 

இந்த நிலையில், மாயாவதி குறித்த  கருத்துக்காக பாஜக பெண் எம்.எல்.ஏ சாதனா சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சாதனா சிங்,   யாரையும் அவமதிக்கும் எந்த எண்ணமும் தனக்கு இல்லை. எனது பேச்சால் யாரேனும் காயப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


Next Story