மேகதாது அணை விவகாரம்; வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது கர்நாடக அரசு


மேகதாது அணை விவகாரம்; வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது கர்நாடக அரசு
x
தினத்தந்தி 21 Jan 2019 4:19 PM GMT (Updated: 21 Jan 2019 4:19 PM GMT)

மேகதாது அணை பற்றிய வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வள துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்து உள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம், ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரி ஆறு ஓடும் வழியில் மேகதாது என்னும் பகுதி உள்ளது. இங்கு, காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டது.  இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

கர்நாடகாவில் கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்பு, முதல்-மந்திரி குமாரசாமி மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.  இந்த அணை, குடிநீர் மற்றும் மின் உற்பத்தி தேவைக்காக கட்டப்பட இருப்பதாக கூறப்பட்டது.

இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோரை குமாரசாமி நேரில் சந்தித்து பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனை அடுத்து, இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படி கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறைக்கு மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய நீரில் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டது.

இந்நிலையில், மேகதாது அணை பற்றிய வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வள துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்து உள்ளது.

Next Story