இவிஎம் ஹேக்கிங்: 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் -மாயாவதி கோரிக்கை


இவிஎம் ஹேக்கிங்: 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும்  -மாயாவதி கோரிக்கை
x
தினத்தந்தி 22 Jan 2019 10:47 AM GMT (Updated: 2019-01-22T16:17:01+05:30)

இவிஎம் ஹேக்கிங் சர்ச்சையை அடுத்து 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் என மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்களில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது பெருத்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை, தில்லுமுல்லு செய்ய ஏற்றவை, தேர்தல் முடிவுகளையே மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளவை என்று பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மின்னணு ஓட்டு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று கூறப்படுவதை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இவ்விவகாரத்தில் புதிய சர்ச்சையாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றது. அதற்கு பின்னர் டெல்லியை தவிர்த்து பிற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இம்மோசடி நடைபெற்றது என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்நுட்ப நிபுணர் சையது சுஜா கூறினார். இந்த குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம்  இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில் 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் என மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். 

ஜனநாயகத்தின் நலனை கருத்தில் கொண்டு இவிஎம் விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும், பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் முடியாது என்றால் வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்தலாம். வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம், இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாயாவதி கூறியுள்ளார்.

Next Story