பிரதமர் மோடி டீ விற்றதே கிடையாது... விஎச்பி முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா பேச்சு


பிரதமர் மோடி டீ விற்றதே கிடையாது... விஎச்பி முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2019 12:53 PM GMT (Updated: 22 Jan 2019 12:53 PM GMT)

பிரதமர் மோடி டீ விற்றதே கிடையாது, நன்மதிப்பை பெறுவதற்கே அப்படி கூறினார் என விஎச்பி முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.

பிரதமர் மோடி எப்போதும் தான் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்ததாவும், சிறுவயதில் டீ விற்பனை செய்து முன்னேறியதாகவும் குறிப்பிடுவார். தன்னுடைய பேச்சின் போதெல்லாம் அதுதொடர்பாக பேசுவார். 2014 தேர்தலில் மோடி டீ விற்பனை செய்தவர், இப்போது இவ்வளவு உயரத்திற்கு வந்துள்ளார் என பா.ஜனதா பிரசாரம் செய்தது. அப்போது பா.ஜனதா பெரும் வெற்றியை தனதாக்கியது. இருப்பினும் அவர் டீ விற்றாரா என்ற கேள்வி எதிர்க்கட்சிகள் வரிசையில் எழுப்பப்பட்டது. 2015-ல் ஆர்.டி.ஐ. பதிலில் பிரதமர் மோடி சிறு வயதில் டீ விற்றார் என்பதற்கு எந்தஒரு ஆதாரமும் எங்களிடம் இல்லை என அரசு பதிலளித்தது.

இந்நிலையில் விஎச்பி முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா பேசுகையில், பிரதமர் மோடி டீ விற்றதே கிடையாது, நன்மதிப்பை பெறுவதற்கே அப்படி கூறினார் என கூறியுள்ளார்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச செயல் தலைவரான பிரவீன் தொகாடியா, பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொறுப்பிலிருந்து வெளியேறினார். இதனையடுத்து ராமர் கோவில் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறார். இப்போது அந்தாராஷ்டிரிய ஹிந்து பரிஷத் என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் தொகாடியா, பிரதமர் மோடியுடனான 43 ஆண்டுக்கால நட்பின்போது அவர் டீ விற்றதே கிடையாது, மக்களிடம் நன்மதிப்பைப் பெறவே அவர் அப்படிச் சொல்லியிருப்பார் என கூறியுள்ளார். 

மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் எண்ணம் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு கிடையாது. மக்களை ஏமாற்றுகிறது எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

Next Story