மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த தகவல்: தொழில்நுட்ப நிபுணர் சையத் சுஜா மீது வழக்குப்பதிவு


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த தகவல்: தொழில்நுட்ப நிபுணர் சையத் சுஜா மீது  வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 23 Jan 2019 6:30 AM GMT (Updated: 23 Jan 2019 6:30 AM GMT)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக, இந்திய தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில், தொழில்நுட்ப நிபுணர் சையத் சுஜா மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுடெல்லி,

லண்டனில் ஐரோப்பாவுக்கான இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை சந்தேகத்திற்கு உள்ளாக்கி கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க வாழ் இந்தியரும், தொழில்நுட்ப நிபுணருமான சையத் சுஜா ஸ்கைப் மூலம் உரையாற்றினார். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்றும், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போதும் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டதாகவும் சையத் சுஜா கூறியிருந்தார்.

இந்த ரகசியம் தெரிந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் சையத் சுஜாவின் இந்த கருத்தை நிராகரித்த தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக தொழில்நுட்ப நிபுணர் சையத் சுஜா மீது டெல்லி போலீசில்  புகார் அளித்தது. அதன்பேரில், சையத் சுஜா மீதும், லண்டனில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story