முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு


முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு
x
தினத்தந்தி 23 Jan 2019 7:51 AM GMT (Updated: 23 Jan 2019 7:51 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்து ராகுல் காந்தி உத்தரவிட்டு உள்ளார்.

புதுடெல்லி, 

இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாட்டிலேயே அதிகமான நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ள (80 தொகுதிகள்) உத்தரபிரதேசத்தில் வெற்றிக்கனியை பறிக்கும் கட்சியே பெரும்பாலும் மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை காணப்படுகிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா உத்தரபிரதேசத்தில் 71 தொகுதிகளில் வென்றது. 

இதனால் இந்த முறை அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில்  சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் கூட்டணி அமைத்தனர்.

 மேலும் இரு கட்சிகளும் மாநிலத்தில் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்தன. சோனியா காந்தி, ராகுல் காந்தி வழக்கமாக போட்டியிடும் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்கள் நிறுத்தப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வந்தாலும் 2 தொகுதிக்கு மேல் தரமாட்டோம் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுவதுபோல் இது இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இது உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதாவை வீழ்த்துவதற்காக மெகா கூட்டணி அமைக்க விரும்பிய காங்கிரசுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில்  காங்கிரஸ்  80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என  அறிவித்து உள்ளது.

இந்த நிலையில்  காங்கிரஸ்  உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை அறிவித்து உள்ளது.  முதல் முறையாக  காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. பிரியங்கா காந்தி இதற்கு முன் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்து வந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்து ராகுல் காந்தி உத்தரவிட்டு உள்ளார்.

Next Story